ரூ.38¾ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி


ரூ.38¾ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி
x
தினத்தந்தி 31 March 2022 1:27 AM IST (Updated: 31 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ரூ.38¾ லட்சத்தை சென்னை அதிகாரிக்கு கொடுப்பதற்காக காரில் வந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

விழுப்புரம்,

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணக்குமார்(வயது 55). இவர் கடந்த ஜனவரி மாதம் 12 பேரிடம் லஞ்சம் பெற்று, திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக இருந்த சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி உள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சரவணக்குமாரை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரக உயர் அதிகாரி உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், சரவணக்குமாரின் நடவடிக்கையை திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், சரவணக்குமார் நேற்று லஞ்சப் பணத்துடன், அவருக்கு சொந்தமான காரில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்வது தெரியவந்தது. அதன்பேரில் திருச்சி போலீசார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

ரூ.38¾ லட்சம்..

இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மாலை 3 மணியளவில் அரசூர் பகுதியில் சரவணக்குமாரின் கார் வந்து கொண்டிருந்தது. உடனே அந்த காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.

அதில், காருக்குள் இருந்த ஒரு துணிக்கடை பையில் கட்டுக்கட்டுகளாக 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் 80 கட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்த பணத்தையும் எண்ணி பார்த்த போது அதில், ரூ.38 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. ஆனால் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை.

சென்னை அதிகாரிக்கு...

இதையடுத்து சரவணக்குமார் மற்றும் கார் டிரைவரான குளித்தலையை சேர்ந்த மணி ஆகியோரை விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கு, லஞ்சமாக கொடுப்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் எடுத்து வர முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச பணத்தையும், சரவணக்குமாரின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story