இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருள், மருந்துகளை அனுப்ப அனுமதி பிரதமரிடம் கோரிக்கை


இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருள், மருந்துகளை அனுப்ப அனுமதி பிரதமரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 1 April 2022 5:13 AM IST (Updated: 1 April 2022 5:13 AM IST)
t-max-icont-min-icon

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு சென்றார். அங்கு தங்கியுள்ள அவர் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேகதாது அணை

குடிநீர் திட்டம் என்ற பெயரில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இது 67.16 டி.எம்.சி. அடி நீர் கொள்ளளவை தேக்கும் மிகப் பெரிய திட்டமாகும். 16.2.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு இது எதிரானது.

எனவே மேகதாது அணைத் திட்டத்திற்கு அல்லது காவிரியின் குறுக்கே கொண்டு வரப்படும் எந்தவித திட்டத்திற்கும் அனுமதியும் வழங்கக் கூடாது என்று நீங்கள் மத்திய ஜல்சக்தித் துறைக்கு அறிவுறுத்த வேண்டும். மேகதாது திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறுவுரை வழங்க வேண்டும்.

தமிழக அரசின் முன் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகையில் எந்தவித புதிய கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அந்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மீனவர் கைது

பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இலங்கை அரசு அவர்களை கைது செய்வதோடு, அவர்களின் படகுகளைக் கைப்பற்றி நீண்ட நாட்களாக வைத்திருப்பது, தமிழக மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினால் 3,690 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் 3,644 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதம் 46 தமிழக மீனவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்திற்கு அவர்கள் கொண்டு வரப்படவில்லை. அவர்களின் படகுகள், இலங்கை கடற்பகுதியில் நீண்ட நாட்களாக அப்படியே வைக்கப்பட்டிருப்பதால் அவை சேதமடைந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற துன்பங்களை தவிர்ப்பதற்காக இருதரப்பிலும் உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. மீனவர் மட்டத்தில் பேச்சுவார்த்தை மற்றும் இணைப்புக் குழு (ஜே.டபுள்யூ.ஜி.) பேச்சு வார்த்தை நடந்து வந்தது. எனவே தொடர்ந்து இதுபோன்ற பேச்சுவார்த்தையை நடத்துவது அவசியமாக உள்ளது. ஜே.டபுள்யூ.ஜி. கூட்டம் விரைவில் நடக்க உள்ள சூழ்நிலையில் இரண்டு நாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கும் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். குறிப்பாக காலகாலமாக பாரம்பரியமாக உள்ள கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்கின்றனர்.

3,500 எந்திரப் படகுகளும், 9 ஆயிரம் நாட்டுப் படகுகளும் அங்கு மீன்பிடிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அங்கேயும் சர்வதேச கடல் எல்லை என்ற காரணத்தைக் கூறி இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

கச்சத் தீவை மீட்டு இந்தியாவிடம் சேர்ப்பதும், அங்குள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதும்தான் தமிழகத்தின் குறிக்கோளாக உள்ளது. எனவே கச்சத்தீவையும், மீனவர்களின் உரிமையையும் மீட்டு, இந்த மோசமான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்.

நிலக்கரியின் தேவை

தமிழகத்தில் நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) அனல் மின் நிலையங்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது. அனல் மின்நிலையங்களுக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் வீதம் ஆண்டுக்கு 26.28 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அதற்கு போதிய ரெயில் தொடர் ஒதுக்கீடு இல்லை. எனவே அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான ரெயில் தொடர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தல்சர்-பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் வழியாக குறைந்தபட்சம் 20 ரெயில் தொடர்களையாவது அனுமதிக்க வேண்டும். அதுபோல, ரெய்கார் புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6.12 சதவீதம் தமிழகத்தின் பங்காக உள்ளது. மேலும் தேசிய பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதத்தையொட்டி உள்ளது. ஆனாலும் பகிரப்படும் வரியில் தமிழகத்திற்கு நியாயமான பங்கு கிடைப்பதில்லை.

எனவே விதிக்கப்படும் மேல்வரி, கூடுதல் கட்டணம் ஆகியவை உடனே திரும்பப் பெறப்பட வேண்டும். அனைத்து வகை மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம், அடிப்படை வரி அளவுடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழகம், வருவாயில் தனது நியாயமான பங்கைப் பெறும்.

வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும்.

ஈழத் தமிழர் சமஉரிமை

இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளன. 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஈழத் தமிழர்களின் வருகை அதிகமாகியது.

அந்த வகையில் 1983-2012-ம் ஆண்டு வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். எனவே சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை தமிழர்களுக்கு உறுதி செய்வதற்கு இலங்கை அரசை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

உதவ தமிழக அரசு விருப்பம்

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே இலங்கையில் உள்ள தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு கடல் மார்க்கமாக வந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் 3 ஆண்கள், 5 பெண்கள், 7 குழந்தைகள், 4 மாத கைக்குழந்தை என 16 பேர் தமிழக கடலோரத்தை வந்தடைந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத சூழ்நிலையில் மிக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு அவர்கள் வந்தனர். தற்போது அவர்கள் ராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள நிரந்தர முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மிக மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக மேலும் பலர் தமிழகத்திற்கு வரக்கூடும் என்ற தகவல்கள் வந்துள்ளன.

எனவே இந்த சூழ்நிலை கருதி, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மற்றும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக தமிழ் பெண்கள், குழந்தைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் மற்றும் உயிர்காக்கும் மருந்து ஆகியவற்றை வழங்க தமிழக அரசு விருப்பம் கொண்டுள்ளது.

இந்த கருணை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தேவையான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story