டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.. சோனியா காந்தி பங்கேற்பு


டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.. சோனியா காந்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 3 April 2022 5:30 AM IST (Updated: 3 April 2022 5:30 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப் பட்டுள்ள தி.மு.க. அலுவலகத்தை சோனியாகாந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் எழில் நயத்துடன் தி.மு.க.வின் கட்சி அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது.



பிரமாண்ட தி.மு.க. அலுவலகம்

3 மாடிகளை கொண்ட பிரமாண்ட தி.மு.க. அலுவலகத்தில் கூட்ட அரங்கம், செய்தி யாளர் அறை, நூலகம், தங்கும் அறைகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

தரை தளத்தில் உள்ள முரசொலிமாறன் அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் தங்கமுலாம் பூசப்பட்ட புகைப்பட சித்திரங்கள் உள்ளன.

அதில் பெரியார், அண்ணா, க.அன்பழகன், முரசொலிமாறன் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இருப்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. அண்ணா-கலைஞர் அறிவாலய வளாகத்தின் முகப்பு பகுதியில் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

திறப்பு விழா

கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் தி.மு.க. அலுவலகத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க. அலுவலக திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசினார்.

இதனையடுத்து அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்க அண்ணா- கலைஞர் அறிவாலயத்துக்கு மாலை 4.15 மணிக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார்.

அவரைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட முக்கிய பிரமுகர்கள் வந்தனர். சிறப்பு விருந்தினர்களை கனிமொழி எம்.பி. வரவேற்று அழைத்து வந்தார்.



மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார்

விழாவின் தொடக்கமாக, தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதையடுத்து, அண்ணா-கலைஞர் அறிவாலயத்தையும், அதற்கான கல்வெட்டையும் ‘ரிமோட்' பொத்தானை அழுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலையை துரைமுருகனும், கருணாநிதியின் மார்பளவு சிலையை டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர். பின்னர் முரசொலி மாறன் அரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையடுத்து அண்ணா-கலைஞர் அறிவாலய வளாகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை சோனியா காந்தி ஏற்றி வைத்தார். பின்னர், ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய, ‘கருணாநிதி-ஒரு வாழ்க்கை' என்ற ஆங்கில நூலை இந்து என்.ராம் வெளியிட அதனை சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் ஜே.ஜெயரஞ்சன் எழுதிய ‘ஒரு திராவிட பயணம்' என்ற ஆங்கில நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

சோனியாகாந்தி

இதையடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாடாளுமன்றத்தின் முன்பு மு.க.ஸ்டாலின் நிற்பது போன்றும், ஒரு புறத்தில் அண்ணா, மற்றொரு புறத்தில் கருணாநிதி ஆகியோர் நிற்பது போன்றும் வடிவமைக்கப்பட்ட வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட நினைவுப்பரிசு மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. நிறைவாக அண்ணா-கலைஞர் அறிவாலயத்தின் 2-வது தளத்தில் உள்ள பேராசிரியர் நூலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். அதில், நீதிக்கட்சியின் வரலாறு உள்பட ஏராளமான நூல்கள் உள்ளன.

விழாவில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா, தயாநிதிமாறன், சு.திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவிக்குமார், நவாஸ் கனி, மகுவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்), ரவீந்திரகுமார் (தெலுங்கு தேசம் கட்சி), ஜெயசுதா (தெலுங்கு தேசம்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி கட்சி), அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், ஐ.பெரியசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story