மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டைகள் - அதிராம்பட்டினத்தில் பரபரப்பு


மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டைகள் - அதிராம்பட்டினத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 April 2022 6:16 PM IST (Updated: 5 April 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் மீனவரின் வலையில் சிக்கின.

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சோமசுந்தரம், இன்று காலை தனக்கு சொந்தமான படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கடலில் மிதந்து வந்த சில மூட்டைகள் அவரது வலையில் சிக்கியுள்ளது. அதை எடுத்து பார்த்ததில், அவை அனைத்தும் கஞ்சா மூட்டைகள் என்பது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர் சோமசுந்தரம், உடனடியாக இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தார். பின்னர் கடலோர காவல் படை அறிவுறுத்தலின் பேரில், அந்த மூட்டைகளை மீனவர் சோமசுந்தரம் கரைக்கு கொண்டு வந்தார். இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து மூட்டைகளை சோதனை செய்தனர்.

அதில் 5 மூட்டைகளில், 160 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கஞ்சா மூட்டைகள் கடலுக்குள் எவ்வாறு சென்றது, இந்தப் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததா, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பன குறித்து கடலோர காவல்படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story