மாநிலங்கள் இணைந்து மாநில சுயாட்சிக்காக போராடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மாநிலங்கள் இணைந்து மாநில சுயாட்சிக்காக போராடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 April 2022 5:12 AM IST (Updated: 10 April 2022 5:12 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலமாக தனி ஆட்சி நடத்துகிறார்கள். மாநிலங்கள் இணைந்து மாநில சுயாட்சிக்காக போராடுவோம் என்று கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது.

கருத்தரங்கம்

இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார்.

மாநாட்டையொட்டி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட நிர்வாகிகள் முன்னிலையில் ‘மத்திய-மாநில உறவுகள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்த கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொரோனா பரவியபோது தமிழகத்தில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோம். இங்கு முதல்-மந்திரியாக இருந்த பினராயி விஜயன் குறித்து தமிழ்நாட்டு பத்திரிகைகள் பாராட்டி எழுதின. அந்த வகையில் எனக்கு வழிகாட்டும், முன்னோடி முதல்-மந்திரியாக அவர் இருந்தார்.

ஒரு கையில் போராட்ட குணம், ஒரு கையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் கொண்டவராக இருப்பதால்தான் மத்திய அரசை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது ஆட்சியை மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார். உங்களுக்கு (பினராயி விஜயன்) எனது மனமார்ந்த வாழ்த்துகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த மாநாடு நடக்கும் இடம் கேரளா! மத்திய, மாநில உறவுகள் குறித்து பேச வந்திருக்கும் நான் தமிழ்நாடு. இதை விட மிகப்பெரிய ஒற்றுமை வேறு எதுவும் இருக்க முடியாது.


மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் சேர்ந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. ஆனால் சிலர் அரசியல் அரிச்சுவடியையே மாற்றுகிறார்கள்.

இந்தியாவில் எத்தனையோ மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள், கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள், உடைகள், உணவுகள் இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பண்பாடு ஆகும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்று எல்லாவற்றையும் ஒரே - ஒரே - ஒரே என்று ‘கோரஸ்’ பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால் ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்க முடியாது. ஒரே கட்சி என்று ஆகும் வரை பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்று ஆகும்போது நம்மோடு சேர்ந்து பா.ஜ.க.வினரும் எதிர்க்கத்தான் வேண்டும். இத்தகைய எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்தான் ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது ஆகும்.

பா.ஜ.க. அரசுக்கு அதிகார வெறி

கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களை கூட தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அதிகார வெறியோடு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் நிறைவேற்றி கொள்கிறார்கள். இவை அனைத்தையும் கவர்னரை வைத்து அமல்படுத்தி கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை இருக்கும்போது கவர்னரை வைத்து கொண்டு ஆட்சி செலுத்துவது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது அல்லவா? இதனை ஒரு மத்திய ஆட்சியே செய்யலாமா?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலமாக தனி ஆட்சி நடத்துவதுதான் சட்டத்தின் ஆட்சியா?. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை 2 முறை நிறைவேற்றிய ‘நீட்’ விலக்கு மசோதாவை இன்னமும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தமிழகத்தில் உள்ள மாநில கவர்னர் தாமதித்து வருகிறார். நாள் கடத்தி வருகிறார் சட்டத்தின்படிதான் கவர்னர் நடக்கிறாரா?. இப்படித்தான் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கிறது என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

“மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்காத காரணத்தால்தான் இந்திய அரசியலில் பல சிக்கல்களும், முரண்பாடுகளும் தொடர்கின்றன'' என்று தமிழ்நாட்டை 5 முறை ஆண்ட கருணாநிதி சொன்னார். “கோட்டையில் இருக்கிறேன், ஆனால் கோட்டையை சுற்றியுள்ள இடத்தில் புல்லை வெட்டுவதற்கான அதிகாரம் இல்லை” என்றார் அவர்.

தலையாட்டி பொம்மைகளாக...

இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சராக நானாக இருந்தாலும், கேரள முதல்-மந்திரியான பினராயி விஜயனாக இருந்தாலும்- தலையாட்டி பொம்மைகளாக இருந்தால் நமது ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள்.

தலையாட்டி பொம்மையாக நாம் இருக்க வேண்டுமா?. இதுதான் என் கேள்வி. அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைக்கும் தலைவர்கள அனைவரும் முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு

சட்டமன்றத்தாலும், நீதிமன்றத்தாலும், மக்கள் மன்றத்தாலும், இதனை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென்மாநில முதல்-அமைச்சர்களின் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக மற்ற மாநில முதல்-அமைச்சர்கள் கொண்ட குழுவையும் தனியாக அமைக்க வேண்டும்.

மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளை கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த நான் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் அரசியல் மனமாச்சரியங்களை விட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்’ என்று நான் குறிப்பிட்டேன். அதே வேண்டுகோளைத்தான் இங்கும் வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில சுயாட்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதியில் சில ஆங்கில வார்த்தைகளை உதிர்த்தார். அதாவது, ‘மாநில சுயாட்சிக்காக நாம் போராடுவோம். உண்மையான கூட்டாட்சி இந்தியாவை நாம் உருவாக்குவோம்’ என குறிப்பிட்டார். பின்னர் இறுதியாக ‘ரெட் சல்யூட் காம்ரேட்ஸ்’ (செவ்வணக்கம் தோழர்களே...) என்று முழங்கி தனது பேச்சை நிறைவு செய்தார்.

‘தோழர்கள்’ என்பது பொதுவாக கம்யூனிஸ்டுகளை குறிப்பிடும் வார்த்தை என்பதால், திரண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பரித்து கரகோஷம் எழுப்பினர். உற்சாக குரல் எழுப்பி மகிழ்ந்தனர்.

புத்தகம் வழங்கினார்

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஏ டிரவிடியன் ஜர்னி' (ஒரு திராவிட பயணம்) என்ற ஆங்கில நூலை, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு பரிசாக வழங்கினார்.


Next Story