தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
இன்று (11.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (12.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-ம் தேதி உள்தமிழகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீட்டர் மழையும், துத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
11.04.2022, 12.04.2022 : தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story