விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் அமைப்பதை தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்


விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் அமைப்பதை தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 16 April 2022 10:10 PM IST (Updated: 16 April 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

‘தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்’ என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணி

விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக, கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூரு வரை தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை ‘கெயில்’ நிறுவனம் மேற்கொள்ள முயற்சித்தபோது, அது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் 2013-ம்ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை ‘கெயில்’ நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு அந்த முடிவு சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, அங்கு ‘கெயில்’ நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

விவசாயி தற்கொலை

இந்த சூழ்நிலையில், சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணியை ‘கெயில்’ நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கிருஷ்ணகிரி கலெக்டரிடம் மனு அளித்தனர். தற்போது, தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் ‘கெயில்’ நிறுவனத்தினர் 3 நாட்களாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்து வருவதாகவும், இதனை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் தன்னுடைய நிலம் பறிபோக போகிறது என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மன வேதனையை அளிக்கிறது.

தடுக்க வேண்டும்

எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து உடனடியாக ‘கெயில்’ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்க வலியுறுத்தவும், உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மற்றொரு அறி்க்கையில், ‘பருத்தி இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை ரத்து செய்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி’ தெரிவித்துள்ளார்.


Next Story