இளையராஜா கருத்தை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் சொல்லிவிட்டார் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


இளையராஜா கருத்தை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் சொல்லிவிட்டார் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 18 April 2022 6:38 PM GMT (Updated: 2022-04-19T00:08:21+05:30)

பிரதமர் மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசிய கருத்தை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.

சென்னை,

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.11.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் புதிதாக ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தர அமைப்புகளை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் மா.சிவசிலிங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விமர்சிக்க வேண்டாம்

நான் எனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். என்னைவிட தலைவர் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்) தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசியது இளையராஜாவின் சொந்த கருத்து ஆகும். இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர் சொல்லிவிட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சராக...

அப்போது அவரிடம், “நீங்கள் அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக வேண்டும் என்று பல அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது முதல்-அமைச்சர் கவனத்துக்கு போய் இருக்கிறதா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “உங்கள் கருத்து என்ன? அதை நான் தலைவரிடம் சொல்லிவிடுகிறேன்” என்று பதிலளித்தார்.

Next Story