கவர்னரின் பாதுகாப்பு குறைபாடுக்கு மாநில அரசே முழுபொறுப்பு - அண்ணாமலை அறிக்கை


கவர்னரின் பாதுகாப்பு குறைபாடுக்கு மாநில அரசே முழுபொறுப்பு - அண்ணாமலை அறிக்கை
x
தினத்தந்தி 20 April 2022 1:53 AM IST (Updated: 20 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு மாநில அரசே முழு பொறுப்பு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் கவலை அளிக்கிறது. காவல்துறை இந்த குற்றச்செயலை அடக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. மாநிலத்தின் கவர்னரே தாக்கப்பட்டப்பிறகு இப்போதுதான் புரிகிறது. காவல்துறையே முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்பது நமக்கு தெரியும்.

பாதுகாப்பு குறைபாடு

மயிலாடுதுறையில் கவர்னருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு மாநில அரசே முழுபொறுப்பு. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு இந்த ஆட்சியில் எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை இந்த தாக்குதல் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. தமிழக கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சாமானிய மக்களுக்கும் இந்த ஆட்சியில் எப்படிப்பட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று அச்சப்படவேண்டிய நிலையில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.

தமிழக கவர்னர் மீது ஆளும் கட்சியினரும், அதன் தலைமையும் தொடர்ந்து வெளிப்படுத்தும் வெறுப்பும், எதிர்ப்பும் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கவர்னர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பா.ஜ.க.வின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story