கிருஷ்ணகிரி: புழு தாக்குதலால் அழிந்து வரும் தென்னை மரங்கள் - விவசாயிகள் அதிர்ச்சி...!


கிருஷ்ணகிரி: புழு தாக்குதலால் அழிந்து வரும் தென்னை மரங்கள் - விவசாயிகள் அதிர்ச்சி...!
x
தினத்தந்தி 23 April 2022 9:45 AM GMT (Updated: 2022-04-23T15:09:16+05:30)

கிருஷ்ணகிரி அருகே புழு தாக்குதலால் தென்னை மரங்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் அந்தேரிபட்டி, வாலிப்பட்டி, கவுண்டனூர் ஆகிய ஊராட்சிகளில் பல ஏக்கர் நிலங்களில் தென்னந்தோப்புகள் உள்ளன.

சமீபத்தில் தென்னந்தோப்புகள் நெருப்பில் தீய்ந்தது போல காட்சி அளிப்பதுடன், மரங்கள் இறக்கும் நிலைக்கும் சென்றுள்ளன. தென்னை மரத்தின் தென்னங்கீற்றுகளில் பாதிக்கும் மேல் மிகவும் காய்ந்து கருகி கீழே விழும் நிலையை உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். 

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில்,

தென்னை கீற்றுகளில் கருந்தலைப் புழுக்கள் தாக்குதலால் தீயில் கருகியது போல் மரங்கள் காணப்படுகிறது. இந்த கருந்தலைப் புழுக்கள் தென்னையில் உள்ள பச்சையத்தை முழுவதுமாக சுரண்டி விடுவதால் தென்னங்கீற்று காய்ந்து சருகுகள் போல காணப்படுகின்றன.

இந்த கருந்தலைப் புழுக்கள் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான மரங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஒன்று முதல் இரண்டு வருடங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

இதனால் வருடத்திற்கு மூன்று முறை தேங்காய் வெட்டுவதால் கிடைக்கும் லாபம் ஆனது இந்த நோய் தாக்குதலால்  விவசாயிகளுக்கு கிடைக்காமல் போயுள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் வரை விவசாயிகளுக்கு  நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நோய் தாக்குதல் அதிகரித்து வருவதுடன் பக்கத்தில் உள்ள தோப்புகளுக்கும் பரவி வருகிறது. இதனால் பல ஆண்டு காலமாக தேங்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள தென்னை விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

இந்த கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை மற்றும்  வேளாண்மைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story