தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக கடுமையாக உழைக்கும் உழைப்பாளியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பாராட்டியுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:-
முதலில் நிற்கும் தமிழர்கள்
தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியையம், கலாசாரத்தையும் எப்போதுமே பாதுகாக்கக்கூடியவர்கள். குறிப்பாக தங்கள் தாய்மொழிகளை பாதுகாக்கும் போராட்டத்தில் முதலில் நிற்பார்கள். இப்போது அல்ல 1965-ம் ஆண்டே தாய்மொழிக்காக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அப்போது நான் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தபோது அந்த போராட்டத்தை பார்த்தேன்.
நீதி பரிபாலனம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின்படியான நீதிபதிகளின் கடமை மட்டும் அல்ல. அது ஒரு சமூக பொறுப்புகளுடன் கூடியது ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் நீதிபதிகள் கண்ணை மூடிக்கொண்டு சட்டத்தை பின்பற்றி விட முடியாது. சமூக நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சமுதாய மாற்றங்களை நீதிபதிகள் கவனிக்க வேண்டும்.
மொழி தடை கூடாது
உடனடி காபி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், நீதித்துறையின் உண்மையான நிலையை அவர்கள் உணர்வது இல்லை. பொதுமக்கள் தங்களது உரிமைகளை கோர்ட்டுகள் பாதுகாக்கிறது என்று நம்புகின்றனர், இதற்காக நீதித்துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது.
பொதுமக்கள் நீதி பரிபாலனங்களில் பங்கேற்க வேண்டும். அதற்கு மொழி அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது. கோர்ட்டுகளில் தன் வழக்கு என்ன நிலையில் செல்கிறது? என்பதை பொதுமக்களுக்கு தெரியவேண்டும். மாறாக கோவிலில் மந்திரம் சொல்வது போல, புரியாத மொழிகளில் வழக்குகளை நடத்தக்கூடாது.
கோரிக்கை நிறைவேறும்
அரசியல் சாசனத்தின் அடிப்படையில், அந்தந்த மாநில மொழிகளை வழக்காடும் மொழிகளாக ஐகோர்ட்டுகளில் கொண்டு வரவேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகின்றன. இதற்காக பல விவாதங்கள் நடக்கின்றன. உள்ளூர் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க பல தடைகள் உள்ளன. ஆனால், வழக்காடும் மொழி கோரிக்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விரைவில் நிறைவேறும் என்று உறுதி அளிக்கிறேன்.
நீதித்துறையின் உள்கட்டமைப்பை மாற்றி அமைத்து, மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரமுடியும்.
உழைப்பாளி ஸ்டாலின்
நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் 388 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசு விரும்புகிறதா? என்பது பற்றி எனக்கு தெரியாது.
தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக கடுமையாக உழைக்கும் உழைப்பாளியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். என்னைவிட நீதிபதி ராமசுப்பிரமணியனுக்கு தெலுங்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐகோர்ட்டு சாதனை
முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘என்னையும், நீதிபதி எம்.எம்.சுந்தரேசையும், இந்த மண்ணின் மைந்தர்கள் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில்தான் முன்பு ஆந்திராவும் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் இந்த மண்ணின் மைந்தர்தான். மேலும், நாட்டிலேயே அதிக வழக்குகளை பைசல் செய்து முதல் இடத்தில் இருப்பது சென்னை ஐகோர்ட்டுதான். கடந்த ஆண்டு மட்டும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 766 வழக்குகள் தாக்கலாகி உள்ளது.1 லட்சத்து 46 ஆயிரத்து 244 வழக்குகள் பைசல் செய்துள்ளது. இது இந்திய நீதித்துறையில் மிகப்பெரிய சாதனை ஆகும்’’ என்றார்.
இயக்குனர் பதவி
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் சட்டப்படிப்பின் தரத்தை உயர்த்தும் விதமாக தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குனர் பதவிக்கு மாவட்ட நீதிபதியை நியமிக்க தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல்கள் நலனுக்காக பல கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
Related Tags :
Next Story