சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடைமேடையில் ஏறி மின்சார ரெயில் விபத்து - ஓட்டுனர் மீது வழக்கு...!


சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடைமேடையில் ஏறி மின்சார ரெயில் விபத்து - ஓட்டுனர் மீது வழக்கு...!
x
தினத்தந்தி 25 April 2022 8:52 AM IST (Updated: 25 April 2022 9:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடைமேடையில் ஏறி மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது.

சென்னை,

சென்னை கடற்கரை பணிமனையில் இருந்து நேற்று மாலை 4.25 மணியளவில் 12 பெட்டிகளை கொண்ட நவீன ‘3 பேஸ்’ மின்சார ரெயில் கடற்கரை ரெயில் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது.

இந்த ரெயிலை கேரளாவை சேர்ந்த பவித்ரன் என்பவர் இயக்கி வந்தார். ரெயில் நிலையத்துக்கு உள்ளே வந்த மின்சார ரெயில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியது. தொடர்ந்து நடைமேடை 1-ன் தொடக்கத்தில் இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நிற்காமல் கடையை உடைத்து கொண்டு உள்ளே சென்றது. 

இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். 2 கடைகளின் மீது மோதிய பின்னர் அங்கிருந்த கட்டிட சுவரின் மீது மின்சார ரெயில் மோதி நின்றது.

ரெயிலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மின்சார ரெயிலின் என்ஜின் பெட்டியும், அடுத்திருந்த பெட்டியும் என 2 பெட்டிகள் மட்டும் இந்த விபத்தில் பெரும் சேதத்துக்கு உள்ளாகி தடம்புரண்டன. 

மிதமான வேகத்தில் ரெயில் நிலையம் உள்ளே மின்சார ரெயில் வரத்தொடங்கியபோது ‘பிரேக்’ செயல்படவில்லை என பவித்ரன் நடைமேடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் உடனடியாக அங்கிருந்த பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த 2 கடைகளும் மூடப்பட்டிருந்தன. 

இதனால், இந்த விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. நடைமேடையில் மின்சார ரெயில் மோத சில விநாடிகளுக்கு முன்னர் ஓட்டுனர் பவித்ரனும் ரெயில் இருந்து குதித்து உயிர்தப்பினார்.

இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான ரெயிலின் பெட்டிகளை மீட்டு ரெயிலை, ரெயில்வே ஊழியர்கள் பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து நடந்த பகுதியினான முதலாவது நடைமேடையில் 100 மீட்டர் முன்பாகவே இன்று ரெயில்களை நிறுத்தி அங்கிருந்த இயக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு அந்த இடத்தில் வேலிகள் அமைப்பக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்ட ரெயிலின் ஓட்டுனர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆபத்தை உண்டாக்கும் வகையில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் ரெயில் ஓட்டுனர் பவித்ரன் மீது எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

கடற்கரை ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் துர்க்காராம் அளித்த புகாரின் பேரில் ரெயில் ஓட்டுனர் பவித்ரன் மீது எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக விபத்துக்குள்ளான ரெயிலின் ஓட்டுனர் பவித்ரன் மீது ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறா? மனித தவறா? உள்பட பல்வேறு கோணங்களீல் ரெயில் ஓட்டுனர் பவித்ரன் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின் அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Next Story