உதவி வனப்பாதுகாவலர் தேர்வு: அனைத்து என்ஜினீயர் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும்


உதவி வனப்பாதுகாவலர் தேர்வு: அனைத்து என்ஜினீயர் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2022 12:37 AM IST (Updated: 29 April 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

உதவி வனப்பாதுகாவலர் தேர்வு: அனைத்து என்ஜினீயர் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு, உதவி வனப்பாதுகாவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிக்கையை நடப்பாண்டின் நவம்பர் மாதம் வெளியிட இருப்பதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இந்த தேர்வில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் பாகுபாடு இம்முறையாவது நீக்கப்பட வேண்டும்.

உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளில், 8 வகை இளம் அறிவியல் (பி.எஸ்சி) படிப்புகள், 8 வகை என்ஜினீயரிங் படிப்புகள் உள்ளிட்ட 21 வகையான பட்டப்படிப்புகள் மட்டும்தான் அடிப்படைத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பிற அறிவியல், என் ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவர்கள் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாது. இது சம வாய்ப்புக் கொள்கைக்கும், சம நீதி கொள்கைக்கும் எதிரான நிலைப்பாடாகும்.

எனவே, வரும் நவம்பர் மாதம் தமிழக அரசுப் பணி தொகுப்பு 1ஏ-வில் வரும் உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும்போது, எந்தவொரு என்ஜினீயர் பட்டம் பெற்றவரும் அதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்வாணையத்திற்கு அரசும், வனத்துறையும் உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story