மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2022 11:16 PM GMT (Updated: 3 May 2022 11:16 PM GMT)

மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மதுரை மருத்துவ கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், ‘மகரிஷி சரக் சபத்' என்ற சமஸ்கிருத வாக்கியத்தை கூறி மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், தவறு ஏதும் இழைக்காத மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.ரத்னவேலை காத்திருப்பு பட்டியலில் தமிழ்நாடு அரசு வைத்திருப்பதாக செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவ கல்லூரி மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து இந்த புதிய உறுதிமொழியை தேர்ந்தெடுத்ததாகவும், போதிய காலஅவகாசம் இல்லாததால் பதிவிறக்கம் செய்த உறுதிமொழி படிவத்தை எந்த பேராசிரியரிடமும் தாங்கள் காண்பிக்கவில்லை என்றும், இதுகுறித்து கல்லூரி முதல்வருக்கு ஏதும் தெரியாது என்றும், இந்த ஒற்றை வாக்கியத்திற்காக கல்லூரி முதல்வர் மாற்றப்படுவார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், நேர்மையான, ஊழலற்ற முதல்வரை தாங்கள் இழக்க விரும்பவில்லை என்றும், சமஸ்கிருதத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் எழுதி வாசித்ததாகவும், சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை என்றும், சமஸ்கிருதத்தில் இருக்கும் ‘மகரிஷி சரக் சபத்' உறுதிமொழி படிவத்தை ஏற்கக்கூடாது என்று எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்படவில்லை என்றும், நிகழ்ச்சி முடிந்த பின்புதான், இனி வருங்காலங்களில் ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைதான் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

மதுரை மருத்துவ கல்லூரி முதல்வரை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் பணியமர்த்த வேண்டும்

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவ கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதை கருத்தில் கொண்டு, டாக்டர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story