கோடை விடுமுறை சீசன்: கன்னியாகுமரியில் குவிந்த 5 லட்சம் சுற்றுலா பயணிகள்..!
கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த 1 1/2மாதங்களில் கன்னியாகுமரிக்கு 5 லட்சம் சுற்றுலாபயணிகள் வருகைபுரிந்தனர். மேலும் விவேகானந்தர் மண்டபத்தை 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.
கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த 1 1/2மாதங்களில் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளனர். இதில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133அடிஉயரதிருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story