காவிரியிலிருந்து சட்டவிரோதமாக இறைக்கப்படும் தண்ணீர் தடை செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


காவிரியிலிருந்து சட்டவிரோதமாக இறைக்கப்படும் தண்ணீர் தடை செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2022 6:58 PM GMT (Updated: 2022-05-11T00:28:03+05:30)

காவிரியிலிருந்து சட்டவிரோதமாக இறைக்கப்படும் தண்ணீர் தடை செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாசன கலாசாரம் பரவி வருகிறது. அந்த மாவட்டங்களில் பாசன வசதி ஏற்படுத்தப்படாத பகுதிகளை சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள சிலர் ஒன்றுசேர்ந்து ‘வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கம்’ என்ற பெயரில் சங்கத்தை உருவாக்கி, அதில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். அந்த சங்கத்தின் மூலம் காவிரி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட அணை போன்ற கட்டமைப்பில் நிரப்பப்படுகிறது.

அங்கிருந்து சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒவ்வொருவரின் நிலத்துக்கும் 2.5 அங்குலம் விட்டம் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இத்தகைய தண்ணீர் இணைப்பை பெறுவதற்காக தொடக்க நிலை உறுப்பினர் கட்டணமாக ரூ.20 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இது சட்டவிரோதமான, இயற்கைக்கு எதிரான, நீர்ப்பாசன விதிகளை மீறிய செயலாகும். இந்த முறை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

மேட்டூர் உபரி நீர் திட்டத்தையும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்துதல், தோனிமடுவு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் பாசன தேவைகளை நிறைவேற்ற முடியும். எனவே, இந்த திட்டங்களை செயல்படுத்தவும், அதே நேரத்தில் தலைமடை பாசன மாவட்டங்களில் காவிரியிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் இறைக்கப்படுவதை தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


Next Story