கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை - டிரைவர் கைது....!


கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை - டிரைவர் கைது....!
x
தினத்தந்தி 13 May 2022 6:34 AM GMT (Updated: 13 May 2022 6:34 AM GMT)

சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டி கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை நெற்குன்றம் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராமச்சந்திரன் (வயது 34). தனியார் கழிவுநீர் ஊர்தி டிரைவர். இவருக்கும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும்  கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளதது.

இந்த நிலையில் ராமச்சந்திரனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது செல்போன் எண்ணை அந்த பெண் பிளாக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் நண்பர் சுப்பிரமணியனிடம் கூறியுள்ளார். அப்போது கவலைப்படாதே "நான் உங்கள் இருவரையும் சமாதானம் செய்து  சேர்த்து வைக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

இதையடுத்து கடந்த 10-ந் தேதி இரவு சுப்பிரமணியன் ராமச்சந்திரன் இருவரும் நெற்குன்றம் என்.டி படேல் சாலையில் உள்ள  மைதானத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர் . அப்போது ராமச்சந்திரனின் கள்ளக்காதலியை செல்போனில் தொடர்பு கொண்ட சுப்பிரமணியன் அவருடன் கொஞ்சி பேசியுள்ளார். தன்னுடன் சேர்த்து வைப்பதாக கூறிவிட்டு தனது கள்ளக்காதலியுடன் சுப்பிரமணியன் நெருக்கமாக இருப்பது தெரிந்த ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதில் முகம் மற்றும் பின் தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு  போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story