சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி என்னை விடுவிக்க வேண்டும்- பேரறிவாளன்


சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி என்னை விடுவிக்க வேண்டும்- பேரறிவாளன்
x
தினத்தந்தி 13 May 2022 5:50 PM GMT (Updated: 13 May 2022 5:50 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி என்னை விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எழுத்துப்பூர்வமான வாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், சிறையில் 30 ஆண்டுகளை கழித்த நிலையில், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு விசாரணை முடிந்து தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ள நிலையில், பேரறிவாளன் சார்பில் வக்கீல்கள் கோபால் சங்கர நாராயணன், பிரபு சுப்ரமணியன், பாரிவேந்தன் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த எழுத்துப்பூர்வமான வாதங்களில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அமைச்சரவையின் ஆலோசனையின் படியே கவர்னர் செயலாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி கருணை மனு மீதான முடிவையும் அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே கவர்னர் எடுக்க வேண்டும்.

கவர்னரே முடிவெடுக்க முடியும்

கருணை மனு மீதான கவர்னரின் அதிகாரம், தண்டனையை குறைக்கும் கவர்னரின் அதிகாரம் ஆகியவற்றின் கீழ் கவர்னர் கருணை மனுவை ஏற்பதோ அல்லது நிராகரிப்பதோ குறித்த சுயமாக முடிவெடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மருராம், ஸ்ரீஹரன் வழக்குகளில் தீர்ப்பு கூறியுள்ளது.

அரசமைப்பு சாசனம் 161-வது பிரிவின் அதிகாரத்தை கவர்னர் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு எதிராக வழக்குத் தொடரலாம் என சுப்ரீம் கோர்ட்டு எப்ரூ சுதாகர் வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது

இதன்படி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளனை கவர்னர் விடுவிக்க வேண்டும். இதைத் தவிர்த்து இந்த விவகாரத்தில் சுயமாக முடிவு எடுக்கவும், கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. பேரறிவாளன் கவர்னருக்கு அனுப்பி வைத்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததில் எவ்வித சட்ட வரம்பும் இல்லை.

கருணை மனுவை ஒவ்வொருமுறையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றால், மாநில கவர்னர்களால் இதுவரை கருணை மனு மீதான எடுத்த முடிவுகள் அரசமைப்பு சாசனத்திற்கு முரணாகவும், செல்லாமலும் போகும்.

சுப்ரீம் கோர்ட்டே விடுவிக்க வேண்டும்

29 ஆண்டுகள் சிறையில் இருந்த ராம் சேவக், 28 ஆண்டுகள் சிறையில் இருந்த ஷோர், 16 ஆண்டுகள் சிறையில் இருந்த சதீஷ், 17 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலோபர் நிஷா உள்ளிட்டோரை சுப்ரீம் கோர்ட்டே அரசமைப்புச் சட்டப்பிரிவு 142-வது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்ததை போல தன்னையும் விடுவிக்க வேண்டும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல மத்திய அரசு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.


Next Story