மேல்சபை தேர்தல்: 2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க.வில் 60 பேர் போட்டி..!!


பழைய படம்
x
பழைய படம்
தினத்தந்தி 16 May 2022 12:15 PM GMT (Updated: 16 May 2022 12:15 PM GMT)

வேட்புமனு தாக்கலுக்கு 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மேல்சபை எம்.பி.  இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.கவின் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ்குமார், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் இருந்து இந்த 6 பேருக்கு பதில் புதிதாக 6 பேரை தேர்வு செய்ய ஜுன் 10-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் 4 மேல்சபை எம்.பி. பதவிகளை பெற முடியும்.

இதேபோன்று அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அ.தி.மு.க.வில் இருந்து 2 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் வருகிற 24-ந்தேதி தொடங்க உள்ளது. அன்று முதல் 31-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 4 இடங்களில் ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. விட்டுக்கொடுத்து உள்ளது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் 2 பேர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் புதுமுகங்கள் மேல்சபை எம்.பி.க்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.பி. பதவி கேட்டு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் தினமும் ஏராளமானோர் சந்தித்து பேசி வருகிறார்கள். தங்களை பற்றிய தகவல்களை தொகுத்து கடிதமாகவும் கொடுத்து வருகிறார்கள். இது தவிர எப்படியாவது எம்.பி. பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் வேலையையும் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரும் எம்.பி.பதவி மீது கண் வைத்து காய்களை நகர்த்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகைச்செல்வன், பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை ஆகியோர் எம்.பி. பதவி வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் நேரடியாக கோரிக்கை விடுத்துஉள்ளனர். இவர்கள் தவிர 2-ம் நிலை தலைவர்களும் எம்.பி.பதவிக்காக முட்டி மோதி வருகிறார்கள். மொத்தத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் எம்.பி. பதவி கேட்டு கட்சி தலைமையிடம் கடிதம் கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் களத்தில் இருப்பதாக தெரிகிறது. 

அதிமுக அமைப்புச் செயலாளரான செம்மலைக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாததால், தற்போது எம்.பி. பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது, மாநிலங்களில் அதிமுக சார்பில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதால், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோரும் சீட் கிடைக்க கடும் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

2 எம்.பி. இடங்களுக்கு அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுவதால் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

வேட்புமனு தாக்கலுக்கு 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கேட்பதால் அதில் ஏற்படும் சுமூக முடிவை பொறுத்துதான் வேட்பாளர் பட்டியல் தயாராகும் என்று சொல்லுகிறார்கள். எனவே அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக போகும் 2 பேர் யார் என்பதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Next Story