சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.21½ லட்சம் மற்றும் 1½ கிலோ வெள்ளி பறிமுதல்


சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.21½ லட்சம் மற்றும் 1½ கிலோ வெள்ளி பறிமுதல்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.21½ லட்சம் மற்றும் 1½ கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்டிரல் ரெயில் நிலையம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையிலான போலீசார் குழு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரபாலி, போலீஸ் ஏட்டு பாண்டியன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மோப்ப நாய் குழுவினருடன் அந்த ரெயிலில் ஏறி சோதனையிட்டனர். அப்போது டி3 பெட்டியில் சந்தேகப்படும்படியாக இருந்த நபரை விசாரிக்கும் போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர்.

பணம்-வெள்ளி பறிமுதல்

அதில் ரூ.21 லட்சத்து 45 ஆயிரம் வைத்து இருந்தார். விசாரணையில் அவர், சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த கைலாஷ் குமாவாத் (வயது 29) என்பதும், இவர் உரிய ஆவணங்களின்றி அதிகளவு பணத்தை நெல்லூரில் இருந்து ரெயிலில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் அதே ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் நடந்த சோதனையில், திருவொற்றியூரை சேர்ந்த நாகராஜ் (44) என்பவர் ஆந்திர மாநிலம் தெனாலியில் இருந்து 1.66 கிலோ எடையுள்ள வெள்ளியை ஆவணங்களின்றி எடுத்து வந்ததும் தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வணிக வரித்துறை சார்பில் அபராதமாக ரூ.6 ஆயிரத்து 621 வசூலிக்கப்பட்டது.

1 More update

Next Story