தமிழ்நாட்டில் 21 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 21 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

கொரேனா தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு ஊடுருவியது. இந்த கொரோனாவின் தாக்கத்தால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்தனர். இதையடுத்து, அரசின் கடுமையான கட்டுப்பாடு மூலம் கொரோனாவின் தாக்கத்தை அடக்க முடிந்தது. அதே நேரத்தில் கொரோனா தொற்றை ழுழுவதுமாக விரட்ட முடியாத நிலை நிலவி வருகிறது. அவ்வபோது கொரோனா உருமாறி மிரட்டி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா கேரளாவில் தொடங்கி, தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது தொடர்ச்சியாக இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகியுள்ளது. இந்தநிலையில், நேற்று கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த 76 வயது ஆண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

21 பேருக்கு பாதிப்பு

அதேபோல, தமிழ்நாட்டில் நேற்று 1,196 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் 10 பேர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேர், நீலகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சீபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story