நர்சு வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை


ஓட்டப்பிடாரம் அருகே நர்சு வீட்டில் 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே நர்சு வீட்டில் 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி நர்சு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கனிராஜ் (வயது 37), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாலதி. இவர் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் இவர்கள் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

மேலும், புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதியில் 2 வீடுகள் கட்டி, அதில் ஒன்றை வாடகைக்கும், மற்றொரு வீட்டை திருவிழா உள்ளிட்ட காலங்களில் வந்து தங்கிச் செல்வதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழா

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கோவில் திருவிழாவிற்கு கனிராஜ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்தார். அவர்கள் புதியம்புத்தூரில் உள்ள தங்களது வீட்டில் தங்கினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனிராஜ் தனது மனைவி மாலதியின் 22 பவுன் தங்க நகைகளை புதியம்புத்தூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் வைக்க சென்றார். அப்போது வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் நகைகளை லாக்கரில் வைக்க முடியவில்லை.

22 பவுன் நகைகள் கொள்ளை

இதனால் வீட்டில் உள்ள பீரோவில் அந்த தங்க நகைகளை வைத்து வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு கனிராஜ் தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் கனிராஜின் மற்றொரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் சுந்தர பாண்டியன் மனைவி மாரிலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் காலையில் கனிராஜ் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, சென்னையில் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

வலைவீச்சு

கனிராஜ் உடனே வீட்டுக்கு வந்து பார்த்தார். பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கனிராஜ் அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் அருகே நர்சு வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story