தமிழக மீனவர்கள் 22 பேர் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்


தமிழக மீனவர்கள் 22 பேர் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
x
தினத்தந்தி 10 March 2024 7:54 AM GMT (Updated: 10 March 2024 8:14 AM GMT)

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை,

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நெடுந்தீவு அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் 3 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் வெளியுறவு துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் கடல்கடந்த மீனவர்களுக்கு வலிமை தூணாக விளங்கியதற்காக பா.ஜ.க சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story