ஆடி கிருத்திகை விழாவையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்


ஆடி கிருத்திகை விழாவையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள நாட்களில் 24 மணி நேரமும் அறநிலையத்துறை சார்பாக அன்னதானம் வழங்கப்படும்.

மேலும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும். அதேபோல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்ற ராஜ கோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். புதிதாக அமைக்கப்படுகின்ற வெள்ளி தேர் பணிகளையும் தற்போது ஆய்வு செய்துள்ளோம்.

கோவிலுக்கு மாற்றுப்பாதை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம். 3 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த விழாவின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அவசர உதவிக்கான எண் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வவின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அறநிலையத்துறை கூடுதல் இயக்குனர் திருமகள், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட்கள் மீனாட்சி, சாய் பிரணீத், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், திருத்தணி ஆர்.டி.ஒ. ஹசரத்பேகம், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், துணை ஆணையர் விஜயா, நகர்மன்ற துணைத்தலைவர் சாமிராஜ், நகர செயலாளர் வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story