2,496 கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல்


2,496 கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல்
x

பொன்னை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2,496 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வாகன சோதனை

பொன்னை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாண்ட குப்பம் மூன்று வழி சாலையில் கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் பெங்களூருவில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக பொன்னை போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.

அதன்பேரில் பொன்னை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரய்யா மகன் வினோத் குமார் (வயது 32), கோடவாரி பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (40) ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

2,496 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

காரில் சோதனை செய்ததில் 90 மில்லி அளவு கொண்ட 2,112 மது பாக்கெட்டுகள், 180 மில்லி அளவு கொண்ட 384 மது பாக்கெட்டுகள் என மொத்தம் 2,496 மது பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மதுபாக்கெட்டுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குபதிவுசெய்து வினோத் குமார், ஆனந்தன் ஆகிய இருவரையும் கைதனர்.


Next Story