வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பில், நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டி, பொது மக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட 12 ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்பட 13 ஊர்களுக்கும் 150 சிறப்பு பஸ்களும், திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்கள் என 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல் பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல இன்றும், நாளையும் சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற வழித்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூரில் இருந்து...
இன்றும், நாளையும் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூரில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதின் மூலம் பயணிகளுக்கு வசதியாகவும், தேவையான பஸ் சேவையை அளிக்கவும் ஏதுவாக இருக்கும். எனவே, பயணிகள் www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.