பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்


பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்
x

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம் நடந்தது.

காஞ்சிபுரம்

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களில் விவசாய விளை நிலத்தோடு, குடியிருப்புகளும் அகற்றப்பட்டு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

5 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் கிராமமான ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5 முறை தீர்மானங்களை நிறைவேற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

250-வது நாளாக

இநத நிலையில் போராட்டத்தின் 250-வது நாளான இன்று போராட்டமும் கண்டன பொதுக்கூட்டமும் ஏகனாபுரத்தில் நடைபெற்றது. கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் பங்கேற்று, கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றி மக்களோடு மக்களாக சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் பரந்தூர் விமான நிலையம் ஏன் இங்கு அமைக்கக்கூடாது என்பதை தெரிவிக்கும் புத்தகத்தையும் வெளியிட்டனர். பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏகனாபுரத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.


Next Story