நாமக்கல் மாவட்டத்தில் 30 நாட்களில்விபத்துக்களில் 26 பேர் மரணம்முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்


நாமக்கல் மாவட்டத்தில் 30 நாட்களில்விபத்துக்களில் 26 பேர் மரணம்முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 30 நாட்களில் 26 பேர் பல்வேறு விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர். இதேபோல் நாமக்கல்லை கலக்கிய முகமூடி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தொடரும் விபத்து பலி

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் கடந்த 1997-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 17 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூர் என 4 போலீஸ் உட்கோட்டங்கள் அமைந்துள்ளன. இதில் மொத்தம் 27 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர மகளிருக்கான குற்றங்களை விசாரிப்பதற்காக தனியாக 4 மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன.

நாமக்கல் மாவட்டம் கடின உழைப்பாளிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது இங்கு குற்ற சம்பவங்கள் குறைவாகவே நடைபெறும். ஆனால் விபத்து மரணம் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 522 பேர் விபத்துக்களில் மரணம் அடைந்தனர்.

26 பேர் சாவு

எனவே இந்த ஆண்டு தொடக்கம் முதலே விபத்து மரணத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வல்லுனர்களை வரவழைத்து அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, சாலையின் வடிவமைப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் விபத்து சாவு எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் 26 பேர் இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது விபத்து மரணம் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தவிர குட்கா, கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்தால், போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

ஆசிரியை படுகொலை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 30 நாட்களில் நடைபெற்ற கொலை மற்றும் முக்கிய வழக்குகள் விவரம் :-

* கடந்த 3-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியை பிரமிளா (வயது 36) நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவர் ராஜா கைது செய்யப்பட்டார்.

* கடந்த 3-ந் தேதி திருச்செங்கோடு பச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரகுகுமார் என்பவருக்கு சொந்தமான லாரி திருட்டு போனது.

* கடந்த 6-ந் தேதி திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (50) 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

போலீஸ்காரர் சாவு

* கடந்த 11-ந் தேதி பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் சரவணன் (35) மறவாபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

* கடந்த 12-ந் தேதி சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த காரைகுறிச்சி புதூரை சேர்ந்த ராஜேஸ் (32) என்பவரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

* கடந்த 14-ந் தேதி நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த இளங்கோவன் (23) என்பவரை கைது செய்தனர்.

* கடந்த 18-ந் தேதி தளிகை பகுதியை சேர்ந்த சென்னப்பன் (58), பள்ளிபாளையம் தனபாக்கியம் (46), காட்டுபுத்தூரை சேர்ந்த பாலையா (50) ஆகிய 3 பேர் வெவ்வேறு விபத்துகளில் இறந்தனர்.

* கடந்த 23-ந் தேதி போலீஸ் என கூறி நாமக்கல் பொய்யேரிக்கரை பகுதியில் நடந்து சென்ற சரோஜாவிடம் (67) 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.

* கடந்த 25-ந் தேதி நாமக்கல் அருகே வாகன சோதனயைில் 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த பூபேந்திர சிங் (24), பிரேமாராம் (28) ஆகியோரை கைது செய்தனர்.

* கடந்த 26-ந் தேதி வெப்படை அருகே கள்ள துப்பாக்கி வைத்திருந்த பீகாரை சேர்ந்த மணிஷ்குமார் (26), சாகர் பாஷ்வா (19) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளநோட்டு வழக்கில் 3 பேர் கைது

* கடந்த 27-ந் தேதி சேந்தமங்கலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக செல்லத்துரை (45), சதாசிவம் (42), சிலம்பரசன் (36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

* கடந்த 27-ந் தேதி ஜேடர்பாளையம் அருகே சிவக்குமார் (24) என்பவர் 17 வயது சிறுமியை காதலிக்க வலியுறுத்தி தொந்தரவு செய்ததாக போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

* கடந்த 29-ந் தேதி நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் (35) குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகன் விஜய் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகமூடி கொள்ளையர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் பெரிய விபத்து நடைபெறாமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்கள் மீதான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

இதேபோல் சட்டவிரோத மதுவிற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருவதாகவும், அதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல் நகரில் போதுப்பட்டி மற்றும் என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் கடந்த மாதம் முகமூடி கொள்ளையர்கள் 4 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கடந்த ஒரு மாதகாலமாக முகமூடி கொள்ளையர்கள் பற்றிய பேச்சு இல்லை என்றாலும் அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


Next Story