ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், நகை கொள்ளை


ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், நகை கொள்ளை
x

பள்ளிபாளையம் அருகே பட்டப்பகலில் ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு ரூ.28 லட்சம், 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

ஜவுளி அதிபர்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் பகுதியில் ஜவுளி அதிபர் ஜெயபிரகாஷ் என்பவரின் வீடு உள்ளது. நேற்று மதியம் ஜெயபிரகாசின் தந்தை மணி (வயது 70) வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி பழனியம்மாள் (65) அவர் வீட்டின் பின்பக்க சமையல் அறையில் இருந்தார்.

மதியம் 2 மணி அளவில் 10 பேர் கும்பலாக வந்து வீட்டின் கதவை தட்டினார்கள். முதியவர் மணி கதவை திறந்து யார் என்று கேட்டார். உங்கள் மகன் ஜெயபிரகாசை பார்க்க வந்துள்ளோம் எனக்கூறி அவரை கீழே தள்ளிவிட்டு கை, கால்களை கட்டிப்போட்டு பணம் எங்கே உள்ளது என கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

ரூ.27½ லட்சம்

அவர் பீரோவில் உள்ளது என கையை காட்டியுள்ளார். அவரது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு பீரோவில் இருந்த ரூ.27½ லட்சத்தை எடுத்து கொண்டனர்.

இதனிடையே சமையல் அறையில் இருந்த பழனியம்மாள் சத்தம் கேட்டு அங்கு வந்தார். அவரையும் அந்த கும்பல் மிரட்டி நகைகள் எல்லாம் எங்கு உள்ளது என கேட்டுள்ளது. அதற்கு பழனியம்மாள் அவருடைய பீரோவில் நகை, பணம் உள்ளது என கூறியுள்ளார்.

18 பவுன் நகைகள்

உடனே அந்த பீரோவை திறந்து தங்க நகைகள், வளையல்கள், தோடுகள் என சுமார் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு ஓடி விட்டனர்.

பின்னர் பழனியம்மாள் தனது கணவர் மணியின் கை, கால் கட்டுகளை அவிழ்த்து விட்டார். அவர் மகன் ஜெயபிரகாசுக்கு போன் செய்து விவரத்தை கூறினார். உடனே அவர் பள்ளிப்பாளையம் போலீசுக்கு புகார் அளித்தார்

அதன்பேரில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சண்முகப்பிரியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

தனிப்படை

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமியும் கொள்ளை நடந்த வீட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் பட்டப்பகலில் கைவரிசை காட்டிய 10 பேர் கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றும் அவர் கூறினார்.

பட்டப்பகலில் ஜவுளி அதிபரை கட்டிப்போட்டு நடந்த இந்த சம்பவம் வெடியரசம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story