தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை


தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 3 Jan 2024 3:08 AM GMT (Updated: 3 Jan 2024 5:39 AM GMT)

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், கோவை, ஈரோடு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர், சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலக இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது. கோவை காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து சோதனை நடக்க வாய்ப்பு உள்ளதால் சோதனை நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story