சென்னை புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்


சென்னை புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
x

சென்னை புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக மழை பெய்ததால் ஏரிகளுக்கு 310 கன அடி நீர் கூடுதலாக வந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு கூடுதலாக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக, பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 66 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதேபோல், சோழவரம் 59, புழல் 78, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 10, செம்பரம்பாக்கம் 12 கன அடி மற்றும் தாமரைப்பாக்கம் 41, கொரட்டூர் அணைக்கட்டு 20, நுங்கம்பாக்கம் 48.9, மீனம்பாக்கம் 30.7 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.

கோடை மழை கொட்டித்தீர்த்ததால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. கோடையில் ஏரி நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதை அடுத்து பாதுகாப்பு கருதி நேற்று பிற்பகல் வினாடிக்கு 250 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்த வரையில் 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி (3.6 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 3 ஆயிரத்து 509 மில்லியன் கன அடி (3.5 டி.எம்.சி.) அதாவது, 96.27 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு 550 கன நீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல், 24 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 23.48 அடி நீர் இருப்பு உள்ளது.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர் மட்டத்தை உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் ஏரியின் கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள நீர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதாவது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிடவும் செல்பி எடுக்கவும் பலர் வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.


Next Story