மருத்துவ படிப்புக்கான 2-வது சுற்று கலந்தாய்வு: நாளை தொடங்குகிறது


மருத்துவ படிப்புக்கான 2-வது சுற்று கலந்தாய்வு: நாளை தொடங்குகிறது
x

கோப்புப்படம்

மருத்துவ படிப்புக்கான 2-வது சுற்று கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.

சென்னை,

அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக சுமார் 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்த கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அந்தந்த கல்லூரிகளில் தற்போது சேர்ந்துள்ளனர். ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த இடங்கள் போக மீதம் உள்ள காலியிடங்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் 2-வது சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. விருப்ப இடங்களை தேர்வு செய்வது, ஒதுக்கீடு ஆணை பெறுவது, கல்லூரிகளில் சேருவது என அவகாசம் வழங்கப்பட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதியுடன் கலந்தாய்வு நிறைவுபெற உள்ளது. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 118 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 648 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அதேபோல் 85 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும், 818 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் இந்த 2-வது சுற்று கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.


Next Story