மளிகை கடைக்காரர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
சுல்தான்பேட்டை அருகே மளிகை கடைக் காரர் வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே மளிகை கடைக் காரர் வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
மளிகை கடைக்காரர்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 48). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகுமாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செல்வகுமார் வீடு மற்றும் கடையை அடைத்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ளமற்றொரு வீட்டிற்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் வைத்திருந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
3 பேர் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அப்பநாயக்கன்பட்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 18), சோழவந்தான் குருவித்துறையை சேர்ந்த மணி அய்யப்பன் (35), அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் (22) என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்வகுமாரின் வீட்டில் திருடியதும், மேலும் இவர்கள் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேரிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்கள் எந்தந்த இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.