சென்னையில் வாட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
சென்னையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மஹாலில் அனுமதி இல்லாமல் டி.ஜே நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் அதிக அளவு போதை மருந்து உபயோகித்ததால் உயிரிழந்தார். இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்த நிலையில் இந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது அவர் முறையாக பதில் அளிக்காததால் அவரை சோதனை செய்ததில் போதை மாத்திரை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 28) என்பது தெரிய வந்தது.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சாகுல் ஹமீத் (21),கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் (24) ஆகியோர் போதை மாத்திரை மற்றும் ஸ்டாம்புகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் எடுத்து நேரில் வரவழைத்து விற்பனை செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள், ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.