குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி


குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 25 May 2022 11:23 AM GMT (Updated: 25 May 2022 8:05 PM GMT)

மணப்பாறை அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

திருச்சி

பாப்பான் குளம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45), தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு மணிகண்டன் (16), முரளி (13) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். மணிகண்டன் தச்சுதொழில் செய்து வந்தார். முரளி மணப்பாறை அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் (14), தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன், முரளி, அஸ்வின் குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் ஆகியோர் கீழபூசாரிபட்டியில் உள்ள பாப்பான் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக முரளி தண்ணீரில் மூழ்கினார்.

3 சிறுவர்கள் பலி

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அஸ்வின்குமார் ஆகியோர் முரளியை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமார் உடனே அருகே உள்ள கிராமத்திற்கு சென்று அங்கிருந்த வாலிபர்களிடம் கூறவே 10-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய 3 சிறுவர்களையும் மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை மயக்கம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் சிறுவர்கள் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களை குளமாக்கியது. தனது 2 மகன்களையும் பறிகொடுத்த முருகன் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு மணப்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் துயரம்

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரம்ப காலத்தில் நல்ல நிலையில் இருந்த பாப்பான் குளம் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளதால் எந்த இடத்தில் பள்ளம் அதிகமாக உள்ளது. எந்த இடம் மேடாக உள்ளது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த குளத்தில் மூழ்கி ஏற்கனவே 5-க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இந்த குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த குளத்தை முழுமையாக தூர்வார வேண்டும் என்றனர்.


Next Story