சென்னை அண்ணாசாலையில் சொகுசு கார் மோதி 3 பேர் காயம் - போலீசார் விசாரணை


சென்னை அண்ணாசாலையில் சொகுசு கார் மோதி 3 பேர் காயம் - போலீசார் விசாரணை
x

சென்னை அண்ணாசாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

சென்னை தேனாம்பேட்டையில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி அண்ணாசாலையில் நேற்று முன்தினம் இரவு விலையுயர்ந்த பி.எம்.டபுள்யு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம் அருகில் சாலையோர தடுப்பை இடித்துக்கொண்டு, பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீதும், நடைபாதையில் நின்று பேசிக்கொண்டிருந்த 2 பேர் மீதும் மோதி நின்றது.

இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். 3 பேருக்கும் கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது, போரூர் சரவணா ஸ்டோர் உரிமையாளரின் மகன் யோகேஷ் ஸ்ரீ ரத்தினம் (வயது 26) என்பது தெரியவந்தது. யோகேஷூம் மற்றொரு காரில் வந்த நபர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வேகமாக காரை ஓட்டி வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கார் மோதி காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வரும் ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (30), பெங்களூருவைச் சேர்ந்த பிரபு (38) மற்றும் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு (50) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரை பறிமுதல் செய்து, விபத்து ஏற்படுத்திய யோகேஷிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story