நவீன தொழில்நுட்ப கருவிகளை திருடிய 3 பேர் கைது


நவீன தொழில்நுட்ப கருவிகளை திருடிய 3 பேர் கைது
x

செல்போன் கோபுரங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை திருடிய 3 பேரை வாகன சோதனையின்போது மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

வாகன சோதனை

தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மதிகோன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த 3 பேரும் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 24), தமிழ்ச்செல்வன் (28), சப்பாணிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (31) என தெரியவந்தது. இவர்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்போன் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை திருடி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. குண்டல்பட்டி அருகே ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் கருவிகளை திருட திட்டமிட்டபோது போலீசாரிடம் சிக்கியது உறுதியானது.

3 பேர் கைது

இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு இடங்களில் செல்போன் கோபுரங்களில் உள்ள ஆர்.ஆர். யூனிட் கருவிகளை இவர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது. நல்லம்பள்ளி அருகே ஏலகிரி பகுதி, பென்னாகரம் சாலையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள பகுதி, செக்கோடி மற்றும் மூக்கனூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களில் இவர்கள் ஆர்.ஆர். யூனிட் என்னும் நவீன தொழில்நுட்ப கருவிகளை திருடியிருப்பது தெரியவந்தது. இதேபோல் சேலம், மேச்சேரி, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்த செல்போன் கோபுரங்களில் கருவிகள் திருட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இவ்வாறு திருடிய 11 கருவிகளை இவர்கள் பதுக்கி வைத்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பதுக்கி வைத்திருந்த கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதுதொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story