திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதாகி நின்ற 'லிப்ட்'டில் குழந்தை உள்பட 3 பேர் சிக்கினர்


திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதாகி நின்ற லிப்ட்டில் குழந்தை உள்பட 3 பேர் சிக்கினர்
x

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதாகி நின்ற ‘லிப்ட்’டில் சிக்கிய குழந்தை உள்பட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வீடுகள் என்.டி.ஓ. குப்பம் மீனவ மக்களுக்கு கொடுக்கப்பட்டது. 10 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 'லிப்ட்'டை பயன்படுத்துவது வழக்கம்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மின்தடை ஏற்பட்டதால் திடீரென 4-வது தளத்தில் 'லிப்ட்' பழுதாகி நின்றது. 'லிப்ட்'டின் உள்ளே ஆப்ரேட்டர் முனிரத்தினம், 10-வது மாடியில் வசித்து வரும் மூதாட்டி மற்றும் அவரது 3 வயது பேத்தி என 3 பேரும் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உள்ளே இருந்தபடி கூச்சலிட்டனர். உடனடியாக குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 'லிப்ட்'டுக்குள் சிக்கிக்கொண்ட 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், 'லிப்ட்'டின் கதவை கடப்பாரையால் உடைத்து, 3 வயது பெண் குழந்தை, அதன் பாட்டி மற்றும் ஆபரேட்டர் என 3 பேரையும் சுமார் ஒரு மணிநேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

இங்கு அடிக்கடி இதுபோன்று 'லிப்ட்' பழுதாகி நிற்பதாகவும், இதனை மாற்றித்தர வேண்டும் எனவும் மீனவ மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story