வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே தகடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அஞ்சலை (வயது 40). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. தொடர்ந்து பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகளை காணவில்லை. அதை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து அஞ்சலை திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியில் மேட்டுத்தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் அரிகிருஷ்ணன் (20), வாசு மகன் பிரபாகரன் (22), திருப்பாலபந்தல் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பீட்டர் மகன் ரோகன் (21) ஆகியோர் அஞ்சலை வீட்டில் திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






