கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த வழக்கில் 3 பேர் கைது


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த வழக்கில் 3 பேர் கைது
x

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் மயக்கமடைந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியை சேர்ந்தவர் வனமுத்து. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் பழைய பொருட்களை சேகரித்து ஏற்றுமதி செய்யும் காயலான் கடை வைத்துள்ளார்.

இவரது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள பகுதியில் இருந்து கழிவு நீர் அகற்றும் லாரியை வரவழைத்து, மோட்டார் மூலம் கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வெளியூரில் இருந்து வந்து புதுகல்பாக்கத்தில் தங்கி கழிவுநீர் அகற்றும் வேலை செய்து வரும் அண்ணாமலை (வயது 32), மணி (36) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

இப்போது இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியை தொடங்கியபோது, திடீரென விஷவாயு தாக்கி இருவரும் மயக்கமடைந்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட இருவரையும் மேல் சிகிச்சைக்காக அம்மாபேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் கழிவு நீர் அகற்றும்பணியின் போது பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீசார் கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ் (36), கழிவுநீர் லாரி டிரைவர் குப்பன் (38), வீட்டு உரிமையாளர் வனமுத்து (52) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story