திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 3 பேர் பலி


திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 3 பேர் பலி
x

திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 3 பேர் பலியாகினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது 29). திருமணமாகாத இவர் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கொலை, வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்பட சுமார் 12 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஜெபராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. எனவே அவரது வீட்டார் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் ஜெபராஜ் வேப்பம்பட்டு - திருநின்றவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிய வந்தது.

அதேபோல் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு முல்லை நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 35). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு இரவு 10 மணிக்கு அவர் வீட்டில் இருந்தவர்களுடன் பேசி உள்ளார். ஆனால் அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில் வெள்ளை நிற அரைகை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் கட்டியிருந்தார்.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் உடலையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


Next Story