மின்வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

திண்டிவனம் அருகே மின் வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை தாமதம் ஆனதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திண்டிவனம்
மின்சாரம் தாக்கி பலி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்(வயது 40), முருகதாஸ்(34), சுப்பிரமணியன்(36). தொழிலாளர்களான இவா்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கினர். இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சுமேஷ் சோமன் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேலும் பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் மின் வேலி அமைத்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் கதறல்
இதற்கிடையே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பலியான 3 பேரின் உறவினர்கள், பொதுமக்கள் ஒன்று திரண்டு திண்டிவனம்-மரக்காணம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முயற்சியை கைவிட்ட அவர்கள் வன்னிப்பேர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் அமர்ந்து இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கதறி அழுதனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் பலியான 3 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதமானதை கண்டித்தும், நிலத்தில் மின்வேலி அமைத்தவரை கைது செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மரக்காணம் தாசில்தார் சரவணன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.ஆறுதல்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. அறிவுரையின் பேரில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூனன் பலியான 3 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.






