30 கிலோ இறைச்சி பறிமுதல்


30 கிலோ இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 3 Oct 2023 1:15 AM IST (Updated: 3 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனைக்கு வைத்து இருந்த 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல்

தடையை மீறி விற்பனை

அகிம்சையை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர் மகாத்மா காந்தி. இவருடைய பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள், பார்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதேபோல் மாடு, ஆடு, கோழி இறைச்சி கடைகளும் மூடப்படும் என்றும், தடையை மீறி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே திண்டுக்கல்லில் தடையை மீறி இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வளார்கள் தட்சிணாமூர்த்தி, கேசவன், பாலமுருகன், பிராணிகள் வதை தடுப்பு பிரிவு அதிகாரி கோபிநாதன் மற்றும் போலீசார், தூய்மை பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

30 கிலோ இறைச்சி பறிமுதல்

நாகல்நகர், நத்தம் சாலை, பழனி சாலை, பேகம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 5 இறைச்சி கடைகளை மூடிக்கொண்டு உள்ளே ஆடுகளை அறுத்து இறைச்சி வெட்டிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து 5 கடைகளிலும் இருந்து 30 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதோடு இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தி கத்திகள், தராசுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். பின்னர் அந்த இறைச்சியை பினாயில் ஊற்றி, குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.


Next Story