டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை சாவு: நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் - டிரைவர் கைது


டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை சாவு: நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் - டிரைவர் கைது
x

டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட கொசவன்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கயல்விழி. இவர்களது குழந்தை பவன் (வயது 3½). நேற்று முன்தினம் மாலை பவன் வீட்டு வாசலில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தான். தங்கானூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த டில்லி (52) என்பவர் டிராக்டரில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு பெருமாள் கோயில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

இதில் குழந்தை பவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். டிரைவர் டில்லி டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து பவனின் தந்தை ராஜசேகர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் டில்லியை தேடி வந்தனர். தப்பி ஓடிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், இறந்த பவன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க கோரியும் அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான கொசவன்பாளையம் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழித்தடத்தில் வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மதியம் 2 மணி அளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். மறியல் காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் டில்லியை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story