வருகிற 30-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை


வருகிற 30-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
x

திருவையாறில், தியாகராஜர் ஆராதனை விழா வருகிற 26-ந்தேதி(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு 177-வது ஆராதனை விழா வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தேசூர் செல்வரத்தினம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் நாள் 30-ந்தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இரவு 8 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. இரவு 8.20 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தியாகராஜர் 177-வது ஆராதனை விழாவை முன்னிட்டு வருகிற 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.


Next Story