ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை: மேலும் ஒருவர் கைது


ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை: மேலும் ஒருவர் கைது
x

வடக்கன்குளத்தில் ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி இரவு ஷகிலா தனது மகளுடன் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். மறுநாள் அதிகாலையில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள், ஷகிலாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்கச்சங்கிலி, வளையல் என வீட்டில் இருந்த 32 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து ஷகிலா அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியைச் சேர்ந்த சங்கரசுப்பு (வயது 23) என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை வடக்கு தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் சூர்யா (22) என்பவரை தற்போது போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story