தமிழகத்தில் 33 புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்


தமிழகத்தில் 33 புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

தமிழகத்தில் 33 புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி- அரக்கோணம் சாலையில் நகா்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி வரவேற்றாா். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் பங்கேற்று புதிய பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

தமிழகத்தில் புதிதாக 33 இடங்களில் பஸ் நிலையங்கள் அமைக்கப்படும், அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், மழைநீர் வடிகால், சாக்கடை வடிக்கால், கழிப்பிட வசதி, மார்கெட் வசதி, ஏரிகளை தூர்வாருதல் போன்ற பணிகளுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நீர்நிலை பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்.

ஏற்கனவே இருக்கிற பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நகராட்சி, பேரூராட்சிகளில் நடைமுறைபடுத்தப்படும். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகர்ப்புற பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.3 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் ஒரு பகுதியில் 70 சதவீதமும், மற்றொரு பகுதியில் 24 சதவீதமும் பணிகள் நிறைவடைந்துள்ளது. பணிகள் தாமதத்திற்கு சாலை போக்குவரத்து, மின் கம்பங்கள், மரங்கள் அகற்ற தாமதம் ஆவதே காரணம். போர்க்கால அடிப்படையில் அடுத்த 2 மாதங்களில் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, திமு.க. மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, நகர்மன்ற துணைத்தலைவர் சாமிராஜ், நகர செயலாளர் வினோத்குமார் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த புதிய பஸ்நிலையம் 4.60 ஏக்கா் பரப்பளவில் கட்டபட உள்ளது. பஸ் நிலையத்தின் கட்டிட பணிகளை 18 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story