கடந்த ஆண்டில் கஞ்சா விற்பனை வழக்குகளில் 348 பேர் கைது - திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
271 வழக்குகள் கண்டுபிடிப்பு
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின்னர் முதன்முறையாக நடைபெற்ற திருத்தணி ஆடிக்கிருத்திகை திருவிழா பாதுகாப்பு பணி எந்தவித அசம்பாவிதங்கள் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் 2022-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 285 வழக்குகளில் (கொலை, கூட்டு கொள்ளை, வழிப்பறி, செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா கடத்தல்) 271 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 18 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு, 51 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
67 பேர் கைது
மேலும் இரண்டு கூட்டுக் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ஈடுபட்ட எதிரிகள் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள திருட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் 37 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 21 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 67 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 80 ஆயிரத்து 800 மதிப்புள்ள வழக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கஞ்சா பறிமுதல்
மேலும் காணாமல் போன தொலைபேசிகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 500 செல்போன்கள் இதுவரை மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 218 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடம் இருந்து 1,382 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.