3,913 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்


3,913 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 3,913 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

கடலூர்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள 2,159 குழந்தைகளும், 2 வயது முதல் 3 வயது வரை உள்ள 829 குழந்தைகள் மற்றும் 3 வயது முதல் 6 வயது வரையுள்ள 925 குழந்தைகளும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்தை உறுதி செய்...

அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம், அவர்கள் இயல்பு நிலைக்கு மாறும் வரை செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட உள்ளது. கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, வேர்க்கடலை மற்றும் தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்களை உள்ளடக்கிய புரதம், கொழுப்பு சத்து, இரும்புச்சத்து, போலிக்அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களுடன் கூடிய செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளை 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு (60 கிராம்) செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு (30 கிராம்) செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளது என்றார்.

இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story