தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேர் கைது
புவனகிரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.
புவனகிரியில் உள்ள விருத்தாசலம்-சிதம்பரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது பிரோஸ். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சொந்தவேலை காரணமாக புதுச்சேரிக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் விட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை, 350 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை தேடி வந்தனர்.
கைது
இதில் நகையை திருடிச்சென்றது வடலூர் அருகே கருங்குழியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 22), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகரை சேர்ந்த கார்த்தி மருதுபாண்டி (36), சத்யராஜ் (37), கீழ்புவனகிரி முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை, கியாஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மீட்டனர்.